கிழக்கில் தமிழ் மாணவர்களுக்கு பஞ்சம்




கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் புதிதாக பாடசாலைகளில் இணைந்து கொள்ளும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடம் ஒன்றுக்கு சுமார் 3000க்கும் மேல் குறைவடைந்து செல்லும் அதேவேளை, மாணவர்களின் கல்வி அடைவு மட்டமும் குறைந்து வருவதாக, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரன் புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை - திருக்கோவில் விநாயகபுரம் கனிஸ்ட வித்தியாலயத்துக்கான புதிய வகுப்பறைக் கட்டடத்தை, நேற்று (17) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நான் எதிர்பார்ப்பது மாணவர்களின் கல்வியின் அடைவு மட்டம் உயர்வடைய வேண்டும். இதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழ் மக்களை பொருத்தமட்டில் நாம் இழந்தவற்றை கல்வியின் மூலமாகவே ஈடுசெய்ய வேண்டியுள்ளது.
“தமிழ் பிரதேசங்களில், பாரியளவு பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. அதாவது, தமிழ் மாணவர்களின் கல்வி அடைவு மட்டம் குறைவடைந்துச் செல்வதை நாம் அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. இதனை நாம் கவனத்தில் கொண்டு பாடசாலைகளில் அறிவுறுத்தப்படுகின்ற விடயங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்புகள் வழங்க வேண்டும். அப்போதே தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும்.
“இதேவேளை, பாடசாலைகளுக்குத் தேவையான அபிவிருத்திகளையும் ஆசிரியர்களையும் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் வலயக் கல்வி அலுவலம் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவடைந்ததுடன் மார்ச் மாதம் 1ஆம் திகதிக்குப் பின்னர் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை செய்யக் கூடியதாக இருக்கின்றது.
“எனவே, எங்களால் முடிந்த உதவிகளை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அதேவேளை, பெற்றோர்களும் தங்களால் முடிந்த பங்களிப்புகளை வழங்கி தமிழ்ப் பிரதேசங்களில் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.