கிழக்கு முஸ்லிம்களின் உணர்வுகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவது ஹக்கீமா? முபீனா?




இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவான – போதியளவு விளக்கங்கள் இல்லை. அதனால் கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சாடியுள்ளார். 

காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் இதன்போது மேலும் கூறியதாவது, 

இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தலைமைகள் உறுதியாக இருக்கின்ற நிலையில், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டில் இல்லை. 

கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் “வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இடையில் புகுந்து குழப்பாது” என தேர்தல் மேடைகளில் பகிரங்கமாகவே பேசியுள்ளார். அது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியாகியுள்ளது. 

அவ்வாறாயின் முஸ்லிம் காங்கரசுக்கு வழங்குகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் வடக்கு கிழக்கு இணைப்பை உறுதிசெய்கின்ற வாக்குகளாகவே அமையும். 

ஆனால், அவ்வாறு எதுவும் இல்லை என்ற ரீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும் எனது நண்பருமான யு.எல்.என்.எம்.முபீன் எனக்கெதிராக நான் பொய் கூறுவதாக கூறி அறிக்கை விட்டுள்ளார். 

இவர்களில் யார் கூறுவது உண்மை. கட்சித் தலைவர் ஹக்கீம் கூறுவது உண்மையா? அல்லது கொள்கை பரப்புச் செயலாளர் மூபீன் கூறுவது உண்மையா? இவர்கள் இருவரில் யாருடைய கதையை நாடு கேட்கும். இனப்பிரச்சினை விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உணர்வுகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவது ஹக்கீமா? முபீனா? 

வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஹக்கீம் எதிர்ப்பினை வெளிக்காட்டாத நிலையில் அவர்கள் சார்ந்த கட்சிக்கு வாக்களிப்பது வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஒப்பானது என்று நான் கூறியதில் எந்தவித தவறும் கிடையாது – என்றார்.