(க.கிஷாந்தன்)
உள்ளுராட்சி சபை தேர்தல் முடிந்தவுடன் ஒவ்வொரு வட்டார பிரிவுக்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் தோழ்வியடைவதில்லை. மேலும் இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றாலோ, தோழ்வியடைந்தாலோ இந்த அரசாங்கத்தை மாற்ற முடியாது. தொடர்ந்தும் மூன்று வருடத்திற்கு இந்த அரசாங்கம் தான் நீடிக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு ஐ.தே.க. வின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 17.01.2018 அன்று மஸ்கெலியா ஸ்டர்ஸ்பி தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலின் போது எதிர்கட்சியனருக்கு வாக்களிப்பதன் மூலம் எந்த பயனும் இல்லை. தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியோர் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் வாக்குகளை கேட்கின்றோம். இதன்போது யார் வெற்றிப்பெறுவார் என்று மக்களுக்கு தெரியும்.
கடந்த தேர்தலின் போது எனக்கு மக்கள் ஒரு இலட்சம் வாக்குகளை அளித்துள்ளனர். நான் வாக்குகளை பெற்று மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை செய்து வந்துள்ளேன்.
சம்பள பிரச்சினையில் நான் கையொப்பம் இடவில்லை. கையொப்பமிட்டவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். சம்பள பிரச்சினையை ஒரு வருட காலமாக இழுத்தடிப்பு செய்து, மெதுவான பணிகளை முன்னெடுக்க வைத்து பொய்களை கூறி தற்போதும் வந்து பொய் பிரச்சாரங்களில் ஈடுப்படுகின்றனர். எனக்கு மக்கள் மீது நம்பிக்கையுள்ளது. நான் மக்களில் ஒருவன்.
மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை உரிய நேரத்தில் செய்துக் கொடுப்பேன். நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் பல தடவைகள் பேசி இன்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.
நாங்கள் இவ்வாறான சேவைகள் மற்றும் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்ற பொழுது நான் இடைக்கால கொடுப்பனவை வாங்கிக் கொடுத்ததன் காரணமாக தான் நிலுவை கொடுப்பனவு மக்களுக்கு கிடைக்கவில்லை என்று சிலர் பொய்களை கூறி வருகின்றனர்.
அன்று இடம்பெற்ற சம்பள பிரச்சினையின் போது இது தொடர்பாக நான் அரசாங்கத்துடன் கதைத்து இலவசமாக பணத்தை பெற்றுக் கொடுத்தேன். கூட்டுஒப்பந்தத்திற்கும், இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. கம்பனிகாரர்கள் இதை வழங்கவில்லை. திறைசேரியின் ஊடாகவே நான் இதை பெற்றுக்கொடுத்தேன்.
இவ்வாறான நல்ல சேவைகளை செய்துக் கொடுக்கின்ற போது இவர்கள் உங்களின் வாக்குகளை கொள்ளையடிக்க வருகின்றார்கள்.
தற்போது ஐக்கிய தேசிய அரசாங்கம் வந்ததனாலேயே வெள்ளை வேன் கொள்ளை விவகாரம் இல்லை. கடந்த காலங்களில் பாரிய கடத்தல் சம்பவங்களுக்கு முகங்கொடுத்தோம். தற்போது எந்தவிதமான பயமும் இல்லாமல் நாங்கள் நடமாட கூடிய சூழ்நிலையை இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
எனவே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு நான் உண்மையாக நேர்மையாக பணிகளை முன்னெடுத்துள்ளேன். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 2015ம் ஆண்டு எவ்வாறு உணர்வுபூர்வமாக வாக்களித்தீர்களோ அவ்வாறு இந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போதும் வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment