ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் இதனால் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மற்றொரு தடவை தன்னை அழைத்து, இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும், தான் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரவில்லை என்றும், ஊடகங்களிடம் கூறுமாறு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தனக்கு பணித்ததாகவும் தமிழ் பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில், சம்பந்தப்பட்ட பாடசாலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது பதுளை மாவட்ட மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் தனது மகளை அனுமதிப்பதற்காக, இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதிபரைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
எனினும், அந்தக் கடிதத்தை நிராகரித்த அதிபர், அந்த அரசியல்வாதியின் கோரிக்கையை நிறைவேற்றாததோடு, கல்வி அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க மட்டுமே தான் செயற்படுவேன் எனவும், கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஊவா மாகாண முதலமைச்சரின் செயலாளர், தன்னை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு முதலமைச்சர் தன்னை தகாத வார்த்தைகளால் நிந்தித்ததாக சம்பந்தப்பட்ட அதிபர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை முதலில் ஊவா மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இது பொய்க் குற்றச்சாட்டு என்று மறுத்திருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டிருப்பதால் சமந்த வித்யாரத்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட அதிபர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் முன்னிலையில் இந்த விடயங்கள் குறித்து தௌிவுபடுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஊவா மாகாண கல்விச் செயலாளரும் ஊவா மாகாண முதலமைச்சருடன் இணைந்துகொண்டு தன்னை அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட அதிபர் கூறியுள்ளார்.
Post a Comment
Post a Comment