அதிபர் வராததால் பூட்டை உடைத்து பாடசாலை திறப்பு




கண்டி தெல்தோட்டை  பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று பூட்டை உடைத்து பாடசாலை  திறக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது, குறித்த பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தராமை காரணமாக குறித்த பாடசாலையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைக்குள் செல்ல முடியாமல் வீதியில் நின்றுள்ளனர். இதனை தொடர்ந்து பிள்ளைகளின் பெற்றோர் ஆசிரியர்களும் இணைந்து கல்வி வலயத்துக்கு அறிவித்து, அனுமதிப்பெற்று பாடசாலைக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துள்ளனர்.
 
அத்துடன், இது தொடர்பாக பாடசாலையின் பெற்றோர், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அதனையடுத்து, இது தொடர்பாக உடனடியாக மாகாண கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறித்த அதிபருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர், பணித்துள்ளார்.
 
குறித்த பாடசாலை அதிபர் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தொடர்பாக மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலய கல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், மதியம் வரை பாடசாலையின் அதிபர் பாடசாலைக்கு வருகை தரவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதன் காரணமாக, அதிபர் காரியாலயத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், ஆசிரியர்கள் வரவுப் பதிவேடுகளில் கையொப்பம் இட முடியாத நிலை ஏற்பட்டதுடன், மாணவர்களின் வருகை பதிவேடுகளிலும் பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
 
தமது பாடசாலையின் நிலைகுறித்து உரிய அவதானம் செலுத்துமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.