வைரமுத்துவிற்கு நாவடக்கம் வேண்டும்!




கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து ஈரோட்டில் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் சார்பாக காளை மாட்டு சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதுப்பற்றி ஈரோடு மாவட்ட பிராமணர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷ், 'தமிழ் கடவுளாகவும், எங்கள் தாயாகவும் வணங்க கூடிய ஆண்டாளை, வைரமுத்து தேவையில்லாமல் இழிவாக பேசி இருக்கிறார். இதற்கு முன்பு இராமரையும் அவதூறாக பேசி இருக்கிறார். நீர் பறவைகள் படத்தில் வரும் ஒரு பாடலில் கிறிஸ்துவ மதத்தை தவறுதலாக எழுதினார். அதையடுத்து கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து உடனே மன்னிப்பு கேட்டதோடு அந்த பாடல் வரியும் நீக்கப்பட்டது.


ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்துவை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைத்து இந்து மக்களும் போராடி வரும் நிலையில் இதுவரை வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை. மெத்தனமாக வறுத்தத்தை தெரிவிப்பதாக கூறி இருக்கிறார். இது மேலும் எங்களை கோபம் அடைய செய்கிறது. வைரமுத்து திராவிட சிந்தனை என்ற போர்வையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.

வைரமுத்துவிற்கு நாவடக்கம் வேண்டும். இனியும் யாவாவது இந்து மதத்தை இழிவாக பேசினால் அவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம்.

 வைரமுத்து ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதானத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. தொடர்ந்து போராடுவோம்' என்று தெரிவித்தார்.