மட்டக்களப்பு மாவட்டத்தில், அகால மரணங்கள் அதிகரித்திருப்பதாக, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாண்டின் ஆரம்ப இரு வாரங்களில், இத்தகைய மரணங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக, ஏறாவூர் நகர பிரதேசத்திலும் அதனை அண்டிய இடங்களிலும் வியக்கத்தக்க வகையில், இந்த அகால மரணங்கள் சம்பவித்துள்ளன.
ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரையிலும், இப்பிரதேசத்தில் 24 மரணங்கள் சம்பவித்துள்ளன.
இவற்றில், ஜனவரி 6ஆம் திகதி ஒரே நாளில் 6 மரணங்களும் ஜனவரி 15ஆம் திகதி 5 மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
இயற்கை மரணங்களுக்குப் புறம்பாக, கடலில் மூழ்கிய நிலையில் ஒரு சிறுவனும் காட்டு யானைகள் தாக்கியதில் குடும்பஸ்தர்களான ஆண்கள் மூவரும், தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாடசாலைச் சிறுமிகள் இருவர், ஒரு குடும்பத் தலைவன், ஒரு குடும்பப் பெண், ஒரு இளைஞர் உட்பட ஐவரும், வீதி விபத்தில் சிக்கி ஒரு வயோதிபரும் ஒரு இளம் உத்தியோகத்தரும் மரணித்துள்ளனர்.
இதேவேளை, மர்மமான முறையில் புதர்களடர்ந்த நீரோடையில் இருந்து ஒரு வயோதிபரின் சடலமும் மீட்கப்பட்டது.
டெங்குக் காய்ச்சல் காரணமாக ஒரு சிறுவனும் மாரடைப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும் ஆணும் மரணித்துள்ளனர். ஏனையவர்கள் இயற்கை மரணம் எய்தியுள்ளனர்.
வழமைக்கு மாறான விதத்தில், இந்த அகால மரணங்கள் குறிப்பிட்ட இரு வார காலப்பகுதியில் அதிகரித்து இடம்பெற்றுள்ள விடயம், அனைவராலும் சிலாகித்துப் பேசப்படுகின்றது.
இதேவேளை, இயந்திரமய வாழ்க்கை முறையில் தற்கொலை செய்துகொள்ளும் விரக்தி நிலை வயது வித்தியாசமின்றி அதிகரித்திருப்பது பற்றி, ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தப் போக்கை உடனடியாக மாற்ற உளவியலாளர்கள் மற்றும் வைத்தியர்கள், ஆசிரியர்கள் கவனமெடுக்க வேண்டும் என்றும், ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment