முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூன்று பேருக்கு மார்ச் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவானால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் மோசடி சம்பந்தமான வழக்கொன்றில் அவர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், தற்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.பீ. நவாஸ் மின்சாரத் துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.பி. பெர்டிணந்து ஆகிய மூவருக்கே இவ்வாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கு காணி ஒன்றை கொள்வனவு செய்வதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக இரண்டு விசாரணைக்குழுக்களின் அறிக்கைகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும் சம்பவத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காதிருந்தமை ஊடாக, அப்போதைய சட்ட மா அதிபராக இருந்த மொஹான் பீரிஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அப்போதைய சொலிசிஸ்டர் ஜெனரலாக இருந்த ஏ.எச்.எம்.பீ. நவாஸ் அகியோரால் இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் தவறிழைக்கப்பட்டிருப்பதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் 20 சாட்சியாளர்களும், 19 சாட்சிப் பொருட்களும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பெயரிடப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment