தோணி மேல் செல்லும் இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்லாது




(க.கிஷாந்தன்)

எந்த அரசாங்கம் வந்தாலும் நாம் தோட்டங்களை விட்டுக்கொடுக்க முடியாது. இந்த அரசாங்கம் தோணி மேல் செல்ல கூடிய அரசாங்கமாக தான் காணப்படுகின்றது. இந்த தோணி மேல் செல்லும் அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்லாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டத் கமிட்டி தலைவர், தலைவிமார்களுக்கிடையில் 22.01.2018 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற தெளிவூட்டும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மூன்று வருட காலமாக நாம் மானத்துடனும், மரியாதையுடனும் வாழ்ந்து வருகின்றமா என சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் ஒதுக்கப்பட்ட சமூகமாக தள்ளப்பட்டுள்ளோம். கடந்த ஓர் இரு மாதங்களில் களுத்துறை பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் கொண்ட இறப்பர் தோட்டங்களை அபகறித்துள்ளனர்.

ஏன் அபகறித்துள்ளீர்கள் என்று கேட்டால். எங்களது அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக என்று கூறுகிறார்கள். 

இவ்வாறான நிலைமையே தற்பொழுது காணப்படுகின்றது. இது தொடருமானால் எதிர்காலத்தை பற்றி நாம் யோசிக்க பார்க்க வேண்டும்.

நானும் தம்பி ஆறுமுகனும் அன்றே சொன்னோம். தோட்டங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். தோட்டங்களை அதிகாரிகள் அபகறித்துக்கொள்வார்கள். அரசியல்வாதியும் காட்டிக்கொடுத்து விட்டு ஓடிவிடுவான். நாம் கஷ்டப்படுவோம் என்று. அன்று சொன்னீர்கள் இதெல்லாம் நடக்காது என்று. அன்று நாங்கள் சொன்னது இன்று நடேந்தேறியுள்ளது.

சிறு சிறு ஆசைகளையும, அபிவிருத்திகளையும் செய்துக் கொடுத்தால் மலையகம் அபிவிருத்தி அடையாது. எமது சமூகத்தில் நாம் அபிவிருத்தியை காண வேண்டுமென்றால் காணிக்கு சொந்தகாரனாக வேண்டும்.

அது 7 பேர்ச் கிடையாது. கடந்த தேர்தலில் நுவரெலியா மாவட்ட மக்கள் தான் மாற்றம் வேண்டும் என தீர்மானித்தீர்கள். மாற்றம் வந்தது. ஆனால் மூன்று வருடமாக நாம் துன்பப்பட்டு தான் வந்தோம். தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. அத்தியவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த மாற்றத்தை தான் நீங்கள் தேடி சென்றீர்கள். மீண்டும் கஷ்டத்தை நோக்கி செல்லாமல் சிந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் எற்படுத்திய மாற்றத்தை மறுபக்கம் திருப்பி போட்டால் தான் எதிர்காலத்தில் நாம் மானத்துடனும், மரியாதையுடனும் வாழ முடியும்.

எமக்கு உரிமைகளை காங்கிரஸ் தான் வாங்கிக் கொடுத்தது. வேறு எவனும் வாங்கிக்கொடுக்கவில்லை. மக்கள் போட்ட பிச்சை தான் இந்த வாக்குகள். இந்த வாக்குகளை வாங்கிக்கொண்டு சிலர் பாராளுமன்றம் சென்றுள்ளார்கள். இதை வைத்துக் கொண்டு தான் இன்று அமைச்சர்களாக இருக்கின்றார்கள்.

காங்கிரஸ் வாங்கிக் கொடுத்த வாக்குரிமைகளை பெற்றுக் கொண்டு காங்கிரஸையே இன்று விமர்சிக்கின்றனர். பாராளுமன்றம் சென்று அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர. இவ்வாறு காங்கிரஸை விமர்சிப்பது அபிவிருத்தி அல்ல என்றார்.