சின்ன முகத்துவாரத்தில் சிங்கி இறால்




அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் களப்பு பகுதியில் பல வருடங்களுக்கு பின்னர் இவ்வருடம் இறால் உற்பத்தி வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனால் இப்பிரதேச மீனவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதுடன், களப்பு பிரதேசம் மாலை வேளையில் இறால் பிடிக்கும் மீனவர்களால் சூழ்ந்து காணப்படுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்குள் ஒரு மீனவரால் வலை வீச்சின் மூலம் 10 கிலோகிராம் வரையில் இறால் பிடிக்கப்படும் அதேவேளை, அதிகாலை வரை வீசுகின்றவர்கள் சிலவேளை 20 கிலோகிராம் வரை பிடிப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சாதாரண நாட்களில் 1,000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்ட இறால், தற்போது 450 ரூபாய் வரைக்கும் வீழ்ச்சியடைந்துள்ளதால், நுகர்வோரும் மகிழ்ச்சியுடன் இறாலைக் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.