காங்கேயனோடை ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் வேட்பாளரது வீடு, வாகனம், உடமைகளக்குத் தீவைப்பு




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்பேயனோடை ஈரான்சிற்றி நகரில் இன்று (19) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சார்பான வன்முறைச் சம்பவத்தில் வீடு, வீட்டு உடமைகள் மற்றும் வாகனம் ஒன்றும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வின் ஆதரவாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியில் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூம் என்பவரின் வீடும், வீட்டு உடமைகளும் பட்டா ரக வாகனமுமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
தீ பரவத் தொடங்கியதும் வேட்பாளரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு வெளியே ஓடி வந்து கூக்குரலிடத் துவங்கியதும் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து தீயை கட்டுப்பாட்டக்குள் கொண்டு வந்து அணைத்துள்ளனர்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதோடு விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
உள்ளுராட்சித் தேர்தல் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரைப் பதிவாகிய பெரிய தேர்தல் வன்முறைச் சம்பவமாகவும் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டாவது தேர்தல் வன்முறைச் சம்பவமாகவும் இது பார்க்கப்படுகின்றது.