(க.கிஷாந்தன்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து வெற்றி செய்த பொழுது, அன்று புதிதாக தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாகியது. மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியோர் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியை உருவாக்கினோம். இதன் பலனாக 2015ம் ஆண்டு பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மூன்று உறுப்பினர்கள் வரக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்கு ஐ.தே.க. வின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 18.01.2018 அன்று மாலை நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது வீடுகள் அமைக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் மக்களுக்கென சொந்தமாக காணி கிடையாது. தாரேன் தாரேன் என்று கூறினார்களே தவிர வெறும் சொல்லாமல் மட்டுமே முடிந்துவிட்டன. அமைச்சர் திகாம்பரம் வந்ததன்பின் தான் காணிகள் வழங்குவதற்கு வாய்ப்புகள் கிட்டியது.
7 பேர்ச் காணி சொந்தமாக உரிமையோடு கிடைக்கப்பெற்றுள்ளது. வீடுகள் கிடைக்கப்பெறுகின்றன. எனவே இதெல்லாம் செய்வதற்கான சந்தர்ப்பம் இந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோல பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறை நிலவுவதனால் அரசாங்கத்துடன் கதைத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்துள்ளோம்.
மற்றும் தாதியர்களுக்கு இப்பகுதியில் நிரந்திரமாக இருப்பதற்காக வீடுகளை கட்டுவதற்கு காணிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக பல அபிவிருத்திகளை செய்து வருகின்றது.
ஆகவே இந்த அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றால் பிரதேச சபையை நாம் கைப்பற்ற வேண்டும். பிரதேச சபை நாம் கைப்பற்றினால் தான் இந்த சேவைகளை நாம் செய்ய முடியும்.
பிரதேச சபைகளில் எமது உறுப்பினர்கள் அதிகாமாக வந்தால் தான் எமக்கு தேவையானவற்றறை நாமே செய்துக்கொள்ள முடியும் என்றார்.
Post a Comment
Post a Comment