இலங்கை சட்டத்தின் பிரகாரம் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை




முறிகள் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சாட்சியங்களை ஆராய்ந்து வழக்குத் தாக்கல் செய்யும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் வெளிநாட்டுப் பிரஜை என்ற போதிலும் குற்றச் செயலுடன் தொடர்புபட்டிருந்தால் அவருக்கு எதிராக இலங்கை சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என அவர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.
தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்ற முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைது செய்ய முடியும் என சட்டமா அதிபரை மேற்கோள்காட்டி சிலோன் டுடே பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை கைது செய்ய முடியாது என சிலர் கருத்து வெளியிட்டு வந்தாலும் இலங்கையின் நடைமுறை சட்டத்திற்கு அமைய அவரை கைது செய்ய முடியும் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நாம் தொடர்புகொண்டு வினவியபோது. முறிகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு முறிகள் மோசடி தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என தெரிவித்தார்.
ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சியங்களை ஆராயும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் அரசியல்வாதிகள் சிலருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவின் தலைமையிலான குறித்த ஆணைக்குழு இரண்டு சந்தர்ப்பங்களில் தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிராக எப்போது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படப்போகின்றது என ஜனாதிபதியின் செயலாளரிடம் நாம் வினவினோம்.
அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்காக ஆணைக்குழுவின் அறிக்கைகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்பிவைத்துள்ளதாக ஜனாபதிதியின் செயலாளர் பதிலளித்தார்.