தேர்தல் வேட்பாளர்களின் உறவினர்களான 105 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்




உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களின் உறவினர்களான 105 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு உதவியாளர்கள் மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்குள் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தொகுதிகளிலிருந்து விடுபடும் வகையில் இந்த இடமாற்றங்களை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேட்பாளர்களுடன் உறவு முறை தொடர்புகளை கொண்டுள்ள ஊழியர்களுக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இருந்து தற்காலிக இடமாற்றம் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.