திவுலப்பிற்றிய OIC திடிர் மாற்றம்.விளக்மறியல் கைதி மரணம்




விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் மேலும் இரண்டு பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நீதிமன்ற உத்தரவுப்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர் உயிரிழந்திருப்பதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸாரினால் நேற்று இரவு 08.40 மணியளவில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நீர் கொழும்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த சந்தேகநபர் திவுலப்பிட்டிய பொலிஸாரினால் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த 03ம் திகதி மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவுப்படி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் சந்தேகநபருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், பின்னர் சந்தேகநபர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த மரணம் தொடர்பில் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி உடல் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே குறித்த வயோதிபர் உயிரிழந்திருப்பதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் விஷேட சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக்கினால் இன்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட முவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.