கடலில் கிடைத்தது, காணாமல் போன பெண் பத்திரிக்கையாளரின் தலை




இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டபோது காணாமல் போன சுவீடன் நாட்டைச் சேர்ந்த 'கிம் வால்' எனும் பெண் பத்திரிகையாளரின் தலை தற்போது கடலுக்கடியில் கிடைத்துள்ளது என்று டென்மார்க் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் தலை ஒரு பையில் இருந்தது என்றும் அதே பையில் இரண்டு கால்களும் இருந்துள்ளன என்றும் கோபென்ஹேகன் காவல் துறை ஆய்வாளர் ஜென்ஸ் மொல்லர் கூறினார். அவரின் ஆடைகளைக் கொண்டுள்ள இன்னொரு பையும் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பீட்டர் மேட்சனுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில், பீட்டரின் கடல் சாகசங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதுவதற்காக, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி பயணம் தொடங்கிய பிறகு, 11 நாள்கள் கழித்து தலை மற்றும் கால்களற்ற அவரது உடல், கோபென்ஹெகன் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்டது.
கிம் வாலைக் கொலை செய்து, அவரின் உடலைச் சிதைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பீட்டர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
கோபென்ஹேகன் அருகே உள்ள கடல் பகுதியில் பல முறை மூழ்கித் தேடிய பின்னரே அந்தப் பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை மேலே மிதந்து வராமல் இருக்க கனம் மிகுந்த உலோகத் துண்டுகளுடன் கட்டி கடலுக்குள் வீசப்பட்டிருந்ததாகவும் மொல்லர் கூறினார்.
அந்தத் தலையில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், அது கிம் வாலின் தலைதான் என்று தடயவியல் பல்மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
கிம் வாலின் விலா எலும்பு மற்றும் பிறப்பு உறுப்பில் அவரது மரணம் நிகழ்ந்த சமயம் அல்லது மரணத்திற்கு சற்று கழித்து கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 21 அன்று அவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் கடலுக்குள் தற்போது தலையும், காலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடலுக்குள் கிடைத்தது காணாமல் போன பெண் பத்திரிகையாளரின் தலை, கால்கள்
முந்தைய நாள் இரவில் கோபென்ஹேகன் கடற்கரையில் கிம் வாலை இறக்கி விட்டதாக முதலில் கூறிய பீட்டர், பின்னர் தன்னுடன் கப்பலில் இருந்தபோது தலையில் ஏற்பட்ட ஒரு காயத்தால் அவர் இறந்துவிட்டதால், கடலுக்குள்ளேயே அவரைப் புதைத்துவிட்டதாகக் கூறினார்.
ஒரு பெண்ணின் தலை வெட்டப்படும் காணொளியை உடைய, பீட்டருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் ஹார்ட் டிரைவ் ஒன்று தங்களுக்குக் கிடைத்திருப்பதாகக் காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.