மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நிறைவு




(க.கிஷாந்தன்)

சாகித்திய பாரம்பரிய நிகழ்வுகளை கொண்ட மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா இரண்டு நாள் அமர்வுகளை கொண்டு நுவரெலியாவில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இடம்பெற்றது.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக இடம்பெற்ற இந்த சாகித்திய விழாவினை குறித்த அமைச்சின் அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமை தாங்கி நடத்தினார்.

இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வுகளின் விழா குழு பொறுப்பாளர் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலின் நெறியாட்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் மலையகத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகள், தமிழ் அன்னை தேர் பவனி, தோட்ட தொழிலாளர்களின் கலை அம்சங்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நுவரெலியா நகரில் பழைய கடை வீதியிலிருந்து பேரணி ஆரம்பமாகி விழா மேடை அமைக்கப்பட்டிருந்த நுவரெலியா நகரம் மண்டபம் ஆன சினிசிட்டா அரங்கிற்கு வந்தடைந்து.

இதனையடுத்து முதல் நாள் சாகித்திய நிகழ்வு இரண்டு அமர்வுகளை கொண்டு இடம்பெற்றது. முதல் அமர்வு  மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும், முன்னால் அமைச்சருமான அமரர்.பெரியசாமி சந்திரசேகரன் அமர்வாகும் மற்றும் இரண்டாம் அமர்வு சமூக சேவையாளர் சு.திருச்செந்தூரன் அமர்வாகவும் இடம்பெற்றது.

இதன்போது பாராட்டு நிகழ்வுகள் மற்றும் கலை, கலாச்சார மேடை நிகழ்வுகள் என பலவும் இடம்பெற்றது.

இரண்டாம் நாள் சாகித்திய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் அமர்வு இவரின் அமர்வாக இடம்பெற்றது. இதில் மலையகத்தில் பாரம்பரிய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு கலை நிகழ்வுகள் மேடையில் அரங்கேறியது. அத்தோடு இந்த நிகழ்வில் மலையக தோட்டப்பகுதி மக்களின் பண்பாட்டினை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதனையடுத்து மதியம் இரண்டாம் அமர்வும் 2017ம் ஆண்டு சாகித்திய விழாவின் இறுதி அமர்வாக காயத்திரி பீட சித்தர் முருகேசு சுவாமிகள் ஞாபகமாக அரங்கேற்றப்பட்டது.

இந்த இரண்டாம் அமர்வில் –  தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது, சாகித்திய விழாவின் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் மத்திய மாகாண ஆளுநர், முதலமைச்சர், கண்டி இந்திய உயர்ஸ்தானிகர், தலைவர், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாநகரில் கோலகலமாக 07.10.2017 அன்று ஆரம்பமான மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, 08.10.2017 அன்று இரண்டாம் நாள் நிகழ்வுகளுடன் இனிதே நிறைவடைந்தது.