தைரியப் பெண்




ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மான் நகரை சேர்ந்தவர் ஜாவஹெர் சயீப் அல் குமைத்தி.
22 வயது பெண்ணான இவர் அருகில் உள்ள ராஸ் அல் கமையா நகர மருத்துவமனைக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்று, காரில் தனது தோழியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அல் குமைத்தி காரை ஓட்டி வந்துகொண்டிருந்த போது, ராஸ் அல் கமையா நகருக்கு வெளியே சாலையில் 2 சரக்கு லொறிகள் மோதி, தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.
அவற்றில் ஒன்றின் சாரதியான இந்தியாவைச் சேர்ந்த ஹர்கிர்த் சிங் என்பவரின் உடலில் தீப்பற்றியிருந்தது. அவர் தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.
அங்கிருந்த எவரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை.
இதனைக் கண்ட அல் குமைத்தி, தனது தோழியின் மேல் அங்கியைக் கழற்றித்தருமாறு கேட்டு வாங்கிக்கொண்டு, அவரைக் காரினுள் இருக்கும் படி கூறிவிட்டு, காரிலிருந்து ஓடிச்சென்று, உயிரிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஹர்கிர்த் சிங்கின் மீது அங்கியைப் போர்த்தி தீயை அணைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினரின் உதவியுடன் ஹர்கிர்த் சிங்கையும் காயமடைந்திருந்த மற்றொரு சாரதியையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தீக்காயமடைந்த ஹர்கிர்த் சிங் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
துணிச்சலாகவும் சமயோஜிதமாகவும் செயற்பட்டு சாரதியைக் காப்பாற்றிய அல் குமைத்திக்கு ஐக்கிய அமீரக அரசு உடனடியாக ”தைரியப் பெண்” விருது வழங்கி கௌரவித்துள்ளது.
அபுதாபியில் உள்ள இந்தியத்தூதரகமும் அல் குமைத்தியை கௌரவிக்க முடிவு செய்துள்ளது.