இலங்கையில் மூன்று மாகாண சபைகள் கலைந்துள்ள போதிலும் அவற்றின் முன்னாள் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் மாகாண சபைக்கு சொந்தமான சொத்துக்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பின் தலைவர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகள் தற்போது கலைந்துள்ள போதிலும் அதன் முன்னாள் முதலமைச்சர்களும், அமைச்சர்களும் மாகாண சபையினால் வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
பதவி இழந்துள்ள இவர்கள் அரச சொத்துக்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ள அவர், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமென்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசு சொத்துக்களை இத்தகையோர் தொடர்ந்து பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தவிர்க்க வேண்டுமென்று கூறிய ரஜித் கீர்த்தி தென்னக்கோன் அதனை தடுக்கும் பொறுப்பு மாகாண ஆளுநர்களுக்கு உள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால், மாகாண ஆளுநர்கள் தங்களது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறி வருவதாக கூறிய அவர், ஆளுநர்கள் சட்டப்படி மாகாண சபைகளின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment
Post a Comment