ரோஹிஞ்சா இனப்படுகொலையைக் கண்டித்து கிழக்கில் ஆர்ப்பாட்டம்




மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அங்கு முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஓட்டமாவடி பிரதேசங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவிலும், ஜும்ஆத்தொழுகையின் பின்னர், இன்று (01) ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
காத்தான்குடி
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை என்பன இணைந்து, இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் இருந்து ஆரம்பான இவ்வார்ப்பாட்ட பேரணி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்று அங்கு ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
ஓட்டமாவடி
கல்குடா ஜம்யதுல் உலமா சபையின் வழிகாட்டலில் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல்கள், சமூக சேவை அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன ஒன்றினைந்து ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் முன்பாக  இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கிண்ணியா
கிண்ணியா உலமா சபை, சூரா சபை, பள்ளிவாசல்கள் ஒன்றியம், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிவழி அறப்போராட்டம், ஜும்ஆ தொழுகையின் பின்னர் கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெற்றது.
அக்கரைப்பற்று 
பர்மாவில் ரோஹினியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெரும் இனச்சுத்திகரிப்பு வன்முறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் அதனை தடுக்க இலங்கை அரசும் சர்வதேசமும் பர்மா அரசை வலியுறுத்தவும் ரோஹிணியை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரி அக்கரைப்பற்று மக்கள் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் பட்டின பள்ளிவாசல் முன்பாக அமைதியான முறையில் கண்டன பேரணி நடத்தி ரோஹினியா முஸ்லிம்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்