இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க இலங்கை வருகை தந்துள்ள, அதன் உப தலைவரான இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தார்.
இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதான பொருளாதார வளமான சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வலய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி தேவைகளுக்கான அத்தியாவசிய மார்க்கம் இந்து சமுத்திரம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் மக்களுக்கு நேரடி தாக்கமுள்ளதாகவும் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாட்டு மக்களின் நலனுக்காக உத்தேச புதிய இருதரப்பு பொருளாதாரத் திட்டத்தை துரிதப்படுத்துதல் குறித்து இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இதன்போது இந்திய வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான சினேகப்பூர்வ உறவுகள் மற்றும் நெருங்கிய அரசியல் நிலை தொடர்பிலுள்ள புரிந்துணர்வு காரணமாக எந்தவொரு பிரச்சினையையும் சினேகப்பூர்வமாக தீர்க்க முடியும் எனவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்துள்ள தென் கொரியாவின் பிரதி வௌிவிவகார அமைச்சர் சோ பியுன்க்ஜே, ஜனாதிபதியை இன்று சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment