ஹஜ் கடமையில் ஈடுபட்டிருக்கும் யாத்திரிகர்களுக்கும் உலக வாழ் முஸ்லிம் சமூகத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இதயம் கனிந்த ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-,
மனிதன் தொன்மைக் காலம் தொட்டே சமய நிகழ்வுகளில் ஒன்றுசேர்ந்து ஈடுபடுவதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன. பல யுகங்கள் கடந்த பின்னரும் கூட மனிதர்கள் தாம் பின்பற்றும் சமயத்தின் தனித்துவமான வணக்க வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையோடு தம்மை அர்ப்பணித்துள்ளனர்.
ஹஜ் யாத்திரையின் ஊடாக உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்தில் ஒன்றுசேர்ந்து, மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றுகின்றனர்.
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தெய்வீகப் பிணைப்பை சிறப்பாக எடுத்துக்காட்டும் இந்த ஹஜ் கடமையானது, மனிதர்களுக்கிடையிலான அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலகின் நாற்திசைகளிலும் இருந்து வருகின்ற அனைத்து மக்களும் ஒரே விதமாக இறைவனை வணங்கும் உயர்ந்த வணக்கமாகும்.
பிரிவினை மட்டுமே முதன்மைபடுத்தப்பட்டுள்ள இன்றைய உலகில் பரஸ்பர பிணைப்பையும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் போதனையையும் சமூகமயப்படுத்தும் ஹஜ், உலகுக்கு வழங்கும் உன்னத செய்தி சமத்துவத்தின் மூலம் கட்டியெழுப்பப்படும் உயர்ந்த சமூக நீதியாகும்.
புனித மக்கா நகரை மையமாகக் கொண்டு ஹஜ் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் யாத்திரிகர்களுக்கும் உலக வாழ் முஸ்லிம் சமூகத்துக்கும் எனது இதயபூர்வமான ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Post a Comment
Post a Comment