‘விஜயதாஸவை நீக்கு’




நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மறுத்துவிட்டமையால், அமைச்சுப் பதவிகளிலிருந்து அவரை அகற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சி ​கோரியுள்ளது. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே, மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 
இந்த விவகாரம் தொடர்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹாசீம், 22ஆம் திகதியிட்டு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 17ஆம் திகதியன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நீண்ட நாட்களாக கட்சியினதும், அமைச்சரவையினதும் கூட்டுப்பொறுப்பை மீறுவகையில் செயற்பட்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 
அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பதற்கு, அவருக்கு, ஓகஸ்ட் 21ஆம் திகதிக்கு முன்னர் காலஅவகாசம் வழங்கவேண்டும். அவ்வாறு இல்லையேல், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 
அதனடிப்படையில், செயற்குழுவானது இந்த விவகாரம் தொடர்பில் கட்சியின் தவிசாளராக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுடைய அறிவிப்பு தொடர்பில் தெளிவுபடுத்துமாறு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்கும், அவர் இணக்கத்தை தெரிவித்திருந்தார். 
எனினும், அதன்பின்னர் அந்த இணக்கத்தை மீறி, அவ்வாறான தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளாது, வாரத்தின் இறுதி நாளில், கட்சியையும் கட்சியின் அமைச்சர்களையும் மற்றும் அரசாங்க கொள்கையையும் மேலும் மேலும் விமர்சனங்களுக்கு உட்படுத்தி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்றவகையில், கூட்டுப்பொறுப்பை மீறிச் செயற்பட்டுள்ளார்.