மலேரியா காய்ச்சலைப் பரப்பும் புதிய நுளம்பு வகையொன்று பரவக்கூடிய சுமார் 4000 பகுதிகள், மன்னார் மாவட்டத்தில் அடையாளங்காணப்பட்டுள்ளன.
மலேரியா காய்ச்சலைப் பரப்பும் புதிய வகை நுளம்பு கடந்த டிசம்பர் மாதம் இனங்காணப்பட்டது.
இந்த நுளம்பு மக்கள் பயன்படுத்தும் சுத்தமான நீர் நிலைகளில் பரவுவதாக தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் குறித்த நுளம்பு வகை பரவக்கூடிய 4000 பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மக்கள் பயன்படுத்தாத சுமார் 200 கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலேரியா காய்ச்சலை பரப்பும் புதிய வகை நுளம்பைக் கட்டுப்படுத்தும் நீண்டகால திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட எவரும் இதுவரையில் பதிவாகவில்லை.
எவ்வாறாயினும், நுளம்பு அதிகளவில் பரவி வருவதாக மலேரியா தடுப்பு இயக்கத்தின் மன்னார் பிராந்திய வைத்திய அதிகாரி டொக்டர் கே.அரவிந்தன் தெரிவித்தார்.
நாட்டில் மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நுளம்பு வகை இனங்காணப்பட்டுள்ளது.
மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவரை இந்த நுளம்பு கடிக்கும் போது, மலேரியா வைரஸ் நுளம்பிற்குள் சென்று விடும். வைரஸ் தாக்கத்திற்குள்ளான நுளம்பு மற்றுமொருவரை கடிப்பதன் ஊடாக மலேரியா காய்ச்சல் பரவக்கூடும்.
Post a Comment
Post a Comment