முதன்முறையாக இலச்சினையை மாற்றியது யூடியூப்




பிரபல காணொளி பகிர்வுத் தளமான யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக தமது இலச்சினையை (Logo) மாற்றியுள்ளது.
பிரபல தேடுபொறி தளமான கூகுளின் உப பிரிவுகளில் ஒன்றாக, காணொளிப் பகிர்வுக்கான தளமாக 2004 ஆம் ஆண்டு யூடியூப் இணைய உலகில் அறிமுகமானது.
அது முதல் உலகமெங்கும் காணொளிப்பகிர்வு மற்றும் தரவிறக்கம் ஆகிய சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக யூடியூப் திகழ்கிறது.
தற்போது தனி நபர்கள் முதல் பிரபல நிறுவனங்கள் வரை தங்களுக்கென தனி யூடியூப் அலைவரிசைகளை வைத்துள்ளனர்.
அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர்களும் உண்டு.
இந்நிலையில், ஆரம்பம் முதல் தனக்கென இருந்து வந்த இலச்சினையை யூடியூப் நிறுவனம் முதன்முறையாக தற்போது மாற்றியுள்ளது.
முன்னதாக யூடியூப் என்ற ஆங்கில வார்த்தையில் டியூப் (Tube) என்பது மட்டும் சிவப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களிலும், யூ (You) கருப்பு எழுத்திலும் இருக்குமாறு அதன் இலச்சினை காட்சியளித்தது.
தற்பொழுது அந்த சிவப்பு பின்னணி நீக்கப்பட்டு யூடியூப் என்னும் முழு வார்த்தையும் கறுப்பு எழுத்துகளில் காட்சியளிக்கிறது.
அதே நேரம் யூடியூப்பின் பிரபலமான ”ப்ளே” பட்டன் சிவப்பு பின்னணியில் வார்த்தைகளுக்கு இடது பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மாற்றமானது வெவ்வேறு விதமான கருவிகளில், சிறிய திரைகளில் கூட யூட்யூப் இலச்சினை சிறப்பாக செயற்பட உதவும் என்று தெரிவித்துள்ளது.