சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற சரஹா, பயனாளிகளின் அலைபேசியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருடி, தங்கள் நிறுவன சேர்வர்களில் சேகரிக்கும் விபரம் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் மிக அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் அப்ளிகேஷனான சரஹா பதிவாகியுள்ளது.
இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்கள் அடையாளத்தினை மறைத்துக்கொண்டு, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியும்.
இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட நபர் பற்றிய உண்மையான கருத்துக்களை நேர்மையாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், பலர் இதனை மற்றவர்களைக் கேலி செய்ய உதவும் ஒரு வாய்ப்பாக, கிண்டலாகப் பயன்படுத்தி வந்தனர்.
சிலர் இதனை ”மொட்டைக் கடிதம்” என்றும் கூட வர்ணித்தனர்.
இந்நிலையில், சரஹா மொபைல் அப்ளிகேஷனானது பயனாளிகளின் அலைபேசியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருடி, தங்கள் நிறுவன சேர்வர்களில் சேகரிக்கும் விபரம் தற்பொழுது வெளிவந்துள்ளது.
”சரஹா மொபைல் அப்ளிகேஷனில் நீங்கள் லாக் இன் செய்த உடனேயே உங்களது அலைபேசியின் ஆண்ட்ராய்ட் இயங்கு செயலியில் சேகரிக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட அனைத்தும் சரஹா நிறுவன சேர்வர்களுக்கு மாற்றப்படும். இதற்காக BURP Suit எனப்படும் கண்காணிப்பு மென்பொருளானது பயன்படுத்தப்படுகிறது. இந்த அப்ளிகேஷனை உங்கள் அலைபேசியில் நிறுவும் பொழுது இதற்கான அனுமதி கூறப்பட்டாலும், இதன் மூலமாக பயனாளர்களுக்கு என்ன அனுகூலம் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை,”
என அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் செயற்படும் பிஷப் பாக்ஸ் என்னும் இணையத்தள பாதுகாப்பு நிறுவனத்தில், பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றும் சக்கரி ஜூலியன், அங்கு வெளியாகும் ”சண்டே” செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில், சரஹா அப்ளிகேஷனை உருவாக்கியவரான ஜெயின் அல் அபிதீன் தவ்ஃபீக் தனது டிவிட்டர் பக்கத்தில், ”தொடர்பு எண்கள் சேகரிக்கப்படுவது என்பது இதே அப்பினை பயன்படுத்தும் மற்ற நண்பர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுவதற்குத்தான். அது விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதே சமயம் இந்த நடைமுறையானது சரஹாவின் அடுத்த பதிப்புகளில் நீக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment