வசீம் தாஜுதீன் கொலை வழக்கு - முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை கைது செய்ய முடியும்




வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேகநபராக முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவை கைது செய்ய முடியும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜராகியிருந்த பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்த அவர், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

நீதிமன்றத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக, உயிரிழந்த வசீம் தாஜுதீனின் எலும்பு துண்டுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல், சம்பவம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.