"ஹார்வி" என்ற சூறாவளியால் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், அந்நகரில் இரவு முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியால் ஹியூஸ்டன் நகரில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. நகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், வீடுகளும் சேதமடைந்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான இங்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் திருடு போவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அவசியம் என்று நகர மேயர் சில்விஸ்டர் டர்னர் கூறியுள்ளார்.
காலவரையற்ற இந்த உத்தரவு, உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 முதல் காலை முதல் 10 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிவாரண பணிகளுக்கு உதவுபவர்கள், முதலுதவி அளிப்பவர்கள், பணிக்குச் செல்பவர்கள் மற்றும் பணி முடிந்து வீட்டுக்கு வருவோர் ஆகியோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வெளியேறிய வீடுகளில் இருந்து பொருட்கள் திருடு போவதைத் தடுக்க இந்த தடை உதவும் என்றும், குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க இதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் டர்னர் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் கொள்ளையடிப்பது, ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபடுவது, போலீஸ் அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்வது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக ஹூஸ்டன் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடத்தில் தங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 13,000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
டெக்ஸாஸில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சூறாவளியின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என எடுத்துக்காட்டாக இருக்கும் விதமாக, நிவாரண நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹூஸ்டன் நகருக்கும் டிரம்ப் செல்லவில்லை. தனது பயணத்தால் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் டிரம்ப் அங்கு செல்லவில்லை என அதிபரின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
Post a Comment
Post a Comment