-அப்துல்சலாம் யாசீம், பைஷல் இஸ்மாயில்
“பல விதமான ஊழல் மற்றும் காணி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு பெயர்போன பிரதியமைச்சர் அமீர் அலிக்கு,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதிலளிக்க வேண்டிய எந்த தேவையுமில்லை” என, கல்குடா தொகுதியின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞரணி அமைப்பாளர் லியாப்தீன், இன்று (26) தெரிவித்தார்.
கடந்த 13 வருடத்துக்கும் மேலாக கல்குடா அரசியலில் இருக்கும் பிரதியமைச்சர் அமீர் அலியால் முன்னெடுக்க முடியாத மக்களின் பல்வேறு அடிப்படை அபிவிருத்திப் பணிகளை கிழக்கு முதலமைச்சர் கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொண்டமையை ஜீரணித்துக் கொள்ள முடியமையினாலேயே பிரதியமைச்சர் அமீர் அலி நிலை தாழ்ந்து கருத்து தெரிவித்து வருவதாக, இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் லியாப்தீன் கூறினார்.
கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்களுக்கான கூட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த லியாப்தீன்,
“ தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கல்குடாத் தொகுதியில் கடந்த 13 வருடமாக பிரதியமைச்சர் அமீர் அலி செய்யாத சேவைகளை தான் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்து வருவதால், நாளுக்கு நாள் அவரின் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது
“இதனால் கோமாளித்தானமாக அறிக்கை விட்டும் சிறுபிள்ளைத் தனமான கருத்துகளை கூறியும் பிரதியமைச்சர் அமீர் அலி மக்கள் எள்ளி நகைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கிழக்கு முதலமைச்சர் கோவைகளில் அபிவிருத்திகளைக் காட்டுவதாக பிரதியமைச்சர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்,
நேர்மையாகவும் நியாயமாகவும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளே அதன் நிதியொதுக்கீடுகள் மற்றும் செலவீனங்களுடன் ஆவணப்படுத்தப்படுகின்றன.
முறைகேடாகவும் தமது பினாமிகளுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தங்கள் ஊடாகவும் இலஞ்ச ஊழல் செய்து முன்னெடுக்கப்படும் செயல்களை மக்கள் முன் பகிரங்கமாக ஒருபோதும் முன்வைக்க முடியாது அதனால் தான் இத்தனை காலமும் பிரதியமைச்சரால் ஒரு ஆவணத்தைக் கூட மக்கள் முன்வைக்க முடியவில்லை,
கிழக்கு முதலமைச்சர் இலஞ்சம் பெற்றோ ஊழல்கள் செய்தோ,தனது பினாமிகளுக்கு ஒப்பந்தம் கொடுத்து மக்கள் பணத்தை சுருட்டவோ இல்லையென்பதால் அவர் அச்சமின்றி பகிரங்கமாக ஆவணங்களை மக்கள் முன் வைக்கின்றார்
ஆகவே இதுவரை எமது பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பிலோ எமது மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை தொடர்பில் பராளுமன்றத்திலோ அதிகாரிகளுடனோ இணைந்து தீர்வொன்றை பெற்றுத் தர முடியாத பிரதியமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தையும் ஏனைய இடங்களையும் கிழக்கு முதலமைச்சரை வசைபாடவே பயன்படுத்துகின்றமை அவருக்கு வாக்களித்த மக்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்துகின்றது,
கடந்த ஆண்டில் மாத்திரம் கிழக்கு முதலமைச்சரால் 21 கோடி ரூபாய்க்கான அபிவிருத்திகள் கல்குடாத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டும் கல்வி,விளையாட்டு,வீதி என பல துறைகளிலும் பல கோடி ரூபாய் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,
கௌரவ அமீர் அலி அவர்களே நீங்கள் உங்கள் 13 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கின்றீர்கள்,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர்,சமுர்த்தி பிரதியமைச்சர் மற்றும் தற்போது கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சராக உள்ளீர்கள்,
இத்தனை அமைச்சுக்களை வைத்து உங்கள் 13 வருட அரசியல் பயணத்தில் நீங்கள் மக்கள் மிகவும் பயன்பெறக் கூடிய வகையில் செய்த சேவைகளை உங்களால் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா என சவால் விடுக்கின்றேன்.
தற்போது எமது பிரதேசத்தில் எத்தனை தமிழ் முஸ்லிம் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள்,உங்கள் கட்சியின் தலைவர் கைத்தொழில் அமைச்சராக இருக்கின்றார். உங்களால் ஒரு தொழிற்சாலையை அந்த வேலையில்லா இளைஞர், யுவதிகளுக்காக நிர்மாணித்துக் கொடுக்க முடிந்ததா என்பதையும் கேட்க விரும்புகின்றேன்.
ஆனால், உங்கள் கட்சித் தலைவரையோ உங்களையோ போன்று எந்த தேசிய அமைச்சுக்களும் இல்லாமல் முதலமைச்சர் அவர்கள் ஏறாவூரில் மூன்று ஆடைத்தொழிற்சாலைகளை நிர்மாணித்து ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை நிர்மாணித்து வருகின்றார்.
நீங்கள் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவியேற்று இரண்டு ஆண்டுகளும் கடந்துள்ள நிலையில் நீங்கள் இலங்கையில் எல்லாம் ஏதும் செய்யத் தேவையில்லை. உங்கள் சொந்த ஊரான கல்குடாவில் எந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்துள்ளீர்கள்,
சாதாரண சங்கள் வாழ்வாதார உதவிகளை வழங்குவதைப் போல் 10 தையல் இயந்திரங்களையும் கோழிக்குஞ்சுகளையும் வழங்குகின்றீர்கள். அவற்றிலும் பல்வேறு முறைப்பாடுகள் உள்ளன. தேசிய அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சுப் பொறுப்பை வகிக்கும் நீங்கள் கோழிக்குஞ்சுகளை ஐந்து மாதத்துக்கு ஒரு தடவை 5 பேருக்கு வழங்கித் திரிகின்றீர்கள். இதுவா ஒரு பிரதியமைச்சரின் ஆளுமை.
உங்கள் தொகுதியான வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் எத்தனை அடிப்படைய வசதியற்ற கிராமங்கள் உள்ளன. கழிப்பறைகள் இன்றி தெரு விளக்குகள் இன்றி பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அபிவிருத்தி குறித்து ஒரு திட்டத்தைக் கூட உங்களால் முன்வைக்க முடியவில்லை.
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பகுதிகளில் 2,600 பேருக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதில் பிரதியமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் எவருக்குமே இறுதியில் காணிகள் கிடைக்காமல் பாதிக்கபட்ட மக்கள் மனமுடைந்து சாபமிட்டதை ஊர் மக்கள் நன்கறிவர்.
மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்கள், யுத்தத்தால் தமது வீடுகளை இழந்தவர்கள் போன்றோருக்கு வழங்கப்பட வேண்டிய காணிகள் முறைகேடுகளால் யாருக்குமே வழங்கப்படாமல் போனமை மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது,
அதன் பின்னர் கிழக்கு முதலமைச்சரின் வருகையின் பின்னர் அவரின் முயற்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டம் கட்டமாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமையை இன்று பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்,
அத்துடன், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க வழங்கப்பட்ட காணிகளை தமது நெருங்கிய மூன்று பேருக்கு வழங்க முற்பட்ட பின்னர் கிழக்கு முதலமைச்சர் மாகாண சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றில் அந்த மக்கள் மற்றும் காணி அதிகாரிகளை அழைத்து குறித்த 50 பயனாளிகளுக்கும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதே வீட்டுத் திட்டத்திற்கு எந்த வெட்கமோ குற்றவுணர்ச்சியோ இன்றி யாருக்கும் தெரியாமல் அடிக்கல் நட்டு விட்டு சென்ற உங்கள் உன்னத செயலை ஊரே பாராட்டுகின்றது.
ஆகவே பிறரை தூற்றி அரசியல் செய்வதை விடுத்து கிராமிய அபிவிருத்திப் பிரதியமைச்சர் என்ற வகையில் கௌரவ அமீர் அலி அவர்கள் எமது பகுதிகளில் அடிப்படை வசதிகளின் வாழும் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முன்வரவேண்டும்” என்றார்.
Post a Comment
Post a Comment