‘விமர்சிப்பது பிடிக்கவில்லை’




சந்துன் ஏ. ஜயசேகர
சட்டமா அதிபர் திணைக்களம், எவராலும் விமர்சிக்கப்படுவதை  விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்திணைக்களத்தை விமர்சிப்பவர்கள், அவர்களைத் தனியே விட்டு, சுதந்திரமாகவும் அழுத்தங்களின்றியும் அவர்கள் பணியாற்ற வழிசெய்ய வேண்டுமெனவும் குறி
ப்பிட்டார்.
எமது சகோதர ஊடகமான டெய்லிமிரருக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  “சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள், எந்தவிதக் குறைபாடுகளையும் நான் காணவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். 
மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஊழல்மிக்க அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், எனினும், 2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இறுதி யுத்த விசாரணைகள் 
இலங்கையால் ஜெனீவாவில் உப அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை அமுல்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால், இவ்வாண்டு மார்ச் மாதம் முதல், இலங்கைக்கு 2 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயங்கள் தொடர்பான உள்ளக விசாரணையில், சர்வதேச நீதிபதிகளோ அல்லது சர்வதேச சட்டத்தரணிகளோ இடம்பெறமாட்டார்கள் என்ற தனது கருத்தை மீள வலியுறுத்திய ஜனாதிபதி, உள்ளக விசாரணை தொடர்பாகக் கதைப்பதற்கான காலம் இன்னமும் வரவில்லை என்றும் தெரிவித்தார். 
அரசாங்கம் மீதான விமர்சனங்கள் 
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாகவும், சில தரப்புகளால் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது தொடர்பாகவும் அவரிடம் வினவப்பட்ட போது, “இரண்டு கட்சிகளும் இணைந்து, தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு 2015ஆம் ஆண்டில் முடிவெடுத்த போது, அனைவரும் அதை ஆதரித்தனர். அவ்வாறாயின், தற்போது ஏன் விமர்சிக்கிறார்கள்? இரண்டு கட்சிகளும் இணைந்து, இந்த முடிவுக்கு வராவிட்டால், என்ன நடந்திருக்கும்?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.   சைட்டம் விவகாரம் 
தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகம் (சைட்டம்) தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, அது, தேவைக்கு அதிகமாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் விரைவான தீர்வொன்றைக் காணக்கூடிய நிலையை அது தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். 
இது தொடர்பான தீர்வொன்றைக் காண்பதற்காக, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், மருத்துவ பீடங்களின் பீடத் தலைவர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அதிகாரிகள் ஆகியோருடனான கலந்துரையாடலொன்று, உயர்கல்வி அமைச்சில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
போர்க் குற்றச்சாட்டு 
தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டுமென, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, எழுத்துமூலம் கோரிக்கை விடுத்தார் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதைக் கேட்காமல், தேர்தலுக்கு அவர் சென்றார் எனக் குறிப்பிட்டார். பூகோளச் சமூகத்தின் எதிர்ப்புக்கு முகங்கொடுக்க முடியாமலேயே, தேர்தலுக்கு அவர் சென்றார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 
“2015ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், வர்த்தகத் தடைகளை விதித்திருக்கும். அரச, இராணுவத் தலைவர்கள், போர்க்குற்றங்களுக்காக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பர். 
“இலங்கை மீது காணப்பட்ட எதிர்மறையான நிலையை, நல்லாட்சி அரசாங்கம் மாற்றியது. எந்தவொரு நாடோ அல்லது சர்வதேச முகவரமைப்போ, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாகவோ மின்சாரக் கதிரை தொடர்பாகவோ, தற்போது எதுவும் கதைப்பதில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.