சத்துருக்கொண்டானில் சரிந்தது,வேன்




மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில், ஏறாவூர் - மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு எல்லையிலுள்ள சத்துருக்கொண்டான் வளைவில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வானொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், வான் சாரதி உட்பட வானில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனரென, மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள், வீதியால் சென்றோரால் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எம். ஜெய்னுதீன் (வயது 72) அவரது மனைவி (வயது 65), எம். றிஷாட் (வயது 36) அவரது மனைவி (வயது 35) மற்றும் முஹம்மட் ஸக்கூர் (வயது 22) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெலிமடையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த வான் சத்துருக்கொண்டான் வளைவில், வீதி மருங்கிலிருந்த மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே குடைசாய்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.