இலங்கைக்கு இலக்கு 376




4வது ஒருநாள் போட்டியில் 376 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. 

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகின்றது. 

முன்னதாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 3-0 என தொடரை வசப்படுத்தியுள்ள நிலையில் இன்று நான்காவது போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது. 

இதில், நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

இதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான தவான் 4 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் மறுமுனையில் இருந்த ரோகித் சர்மாவுடன் கரம் கோர்த்த அணித் தலைவர் விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை களங்கடித்த இருவரும் சதமடித்து நீண்ட நேரம் நிலைத்து ஆடினர். 

இதற்கமைய, ரோகித் சர்மா 104 ஓட்டங்களையும் கோலி 131 ஓட்டங்களையும் விளாசியதோடு, ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்த பாண்டே 50 ஓட்டங்களையும் மஹேந்திர சிங் தோனி 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 375 ஓட்டங்களைக் குவித்துள்ளது.