20-வது திருத்த சட்ட மசோதா நிறைவேற்றுவதில் குழப்பம்




இலங்கையில் அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பின் 20-வது திருத்தத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக மாகாண சபைகளில் குழப்பநிலை காணப்படுகின்றது.

இன்று செவ்வாய்க்கிழமை தென் மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக இந்த திருத்தச் சட்ட மூலம் முன்வைக்கப்பட்ட வேளை, அங்கு குழப்ப நிலை காணப்பட்டது.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரொருவர் சபையின் செங்கோலைத் தூக்கிக் கொண்டு கழிப்பறையை நோக்கி ஓடியதையடுத்தே இந்த குழப்ப நிலை ஏற்பட்டது.
இருப்பினும் அரசியலமைப்பின் 20-வது திருத்தம் சபையின் அங்கீகாரத்திற்கு முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட வேளை அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மேல் மாகாண சபையில் இத்திருத்தம் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்த வேளையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக தீர்மானத்திற்கு வர முடியவில்லை. சபை அமர்வு எதிர்வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திருத்தம், நாடாளுமன்றத்தில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெருன்பான்மை தேவை.
இருப்பினும் இச்சட்டத் திருத்தத்தை, மாகாண சபைகளின் அங்கீகாரத்துக்காக ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாகவே மாகாண சபைகளில் குழப்ப நிலை காணப்படுகின்றது.
இலங்கையில் மொத்தமுள்ள 9 மாகாண சபைகளில், 7 மாகாண சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முழுமையான அதிகாரத்திலுள்ளது. ஆனால் 20-வது திருத்தம் தொடர்பாக உறுப்பினர்கள் முரண்பாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகாரத்திலுள்ள 7 மாகாண சபைகளில் வட மத்திய மாகாண சபை மட்டும் தான் இதுவரையில் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சட்டம் நிறைவேற்றப்பட்டால் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நீடிக்கும்
Image captionசட்டம் நிறைவேற்றப்பட்டால் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நீடிக்கும்
ஊவா மாகாண சபை மற்றும் தென் மாகாண சபைகளில் இந்த சட்டத் திருத்தப் பிரேரனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாண சபைகளில் நேற்று திங்கட்கிழமை இந்தப் பிரேரனை முன்வைக்கப்பட்டது. சப்பரகமுவ மாகாண சபை அடுத்த மாதம் 4ம் திகதி வரையும் மேல் மாகாண சபை அடுத்த மாதம் 13-ம் திகதி வரையும் விவாதத்தை ஒத்திவைத்துள்ளன.
கிழக்கு மாகாண சபையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு அமர்வு மூலம் இது பற்றி விவாதிக்கப்படவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த அமர்வு ரத்து செய்யப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இம்மாத அமர்வில் இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படலாம் என எதிர்பார்கப்பட்ட போதிலும் இன்றைய அமர்வின் போது முன் வைக்கப்படவில்லை.
இன்று செவ்வாய்கிழமை கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அடுத்த மாதம் 7-ம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் இதனை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இம்மாத அமர்வில், திருத்தத்திற்கு எதிராக அவை துணைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தனிநபர் பிரேரனையொன்றை முன் வைத்திருந்தார். நிகழ்ச்சி நிரலிலும் அவரது பிரேரனை இடம் பெற்றிருந்தாலும் அதுவும் விவாதிக்கப்படவில்லை.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த திருத்தம் தொடர்பாக ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த திருத்த சட்டம் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தொடர நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவதாக அமையும் என்று இரு நாட்களுக்கு முன்பு இடம் பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் தெரிவித்திருக்கின்றார்.
வட மாகாண சபை எதிர்வரும் 3-ம் திகதி இது பற்றி விவாதிக்கவுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அம்மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஏற்கனவே அறிவித்திருக்கின்றார்.
இலங்கையில் அடுத்த மாதம் 8-ம் திகதி கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலமும் 28-ம் திகதி சப்ரகமுவ மாகாண சபையின் பதவிக்காலமும், அக்டோபர் 1-ம் திகதி வட மத்திய மாகாண சபையின் பதவிக்காலமும் நிறைவடைகின்றது.
பதவிக்காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகளுக்கும் தற்போதைய மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் 2-ம் திகதி வேட்பு மனுக்களை கோர எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகின்றது .
20-வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கின்றது.
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திருத்தம் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட வேண்டிய திகதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்றும் கூறுகின்றது.
கிழக்கு , சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களின் 5 வருட பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில் இந்த திருத்தத்திற்கு குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. ஆளும் கட்சியிலுள்ள பங்காளி கட்சிகளும் இது தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
அடுத்த மாதம் பதவிக் காலம் முடிவடையுள்ள மாகாண சபைகளின் ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்கான யுக்தி என எதிர்கட்சிகளினால் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் குறித்த மாகாண சபைகளின் தேர்தல்கள் தாமதமடையும். அதுவரை அச்சபைகளின் பதவிக் காலத்தை அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறும் திகதி வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.