"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியாணா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 17 பேர் பலியானதாகவும் சுமார் 50-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள் எனக் கூறிக் கொள்ளும் ஆயிரக்கணக்கானோர் தீர்ப்பு வழங்கப்பட்ட பஞ்ச்குலா பகுதியிலும் ஹரியாணாவின் பல்வேறு இடங்களில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் இரண்டு ரயில் நிலையங்களில் பொது சொத்துகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
டெல்லியில் ரயிலுக்கு தீ வைப்பு
டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இதனால் டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பஞ்சாப், ராஜஸ்தான் வழியாக டெல்லிக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டீகர் உள்ளது. அதன் புறநகர் பகுதியில் பஞ்ச்குலா உள்ளது. அந்த இடத்திலும் சண்டீகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கு ஏற்கனவே மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப் படையினரும் உள்ளூர் காவல்துறையினரும் வன்முறையைத் தடுக்க தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு தீர்ப்பு பற்றி விவரம் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், பஞ்ச்குலாவில் நீதிமன்ற வளாகத்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ஏராளமான காவல்துறை வாகனங்கள், தனியார் வாகனங்கள், கடைகள் ஆகியவற்றின் கண்ணாடிகளை குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள் அடித்து நொறுக்கினர்.
அரசு பேருந்துகள், வாகனங்கள் ஆகியவற்றையும் சிலர் தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்த வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குர்மீத் சிங் மீதான வழக்கின் தீர்ப்பையொட்டி வன்முறை வெடிக்கலாம் எனக் கருதி ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் சில இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகளான இணையதளம், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், சமூக ஊடகங்களின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஹரியாணா மாநில அமைச்சரவை முதல்வர் மனோகர் கட்டார் தலைமையில் கூடி அவசரமாக ஆலோசனை நடத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முதல்வர் மனோகர் கட்டாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலைமைகளை கேட்டறிந்தார்.
இதேபோல, ராஜ்நாத் சிங்கை அண்டை மாநிலமான பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது ராஜ்நாத் சிங்கிடம் கூறியதாக அம்ரிந்தர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment