முறிகள் விநியோகத்துடன் நேரடி தொடர்புடைய ஏதேனுமொரு தரப்பு நட்டத்தை ஏற்படுத்தியிருந்தால், அந்தத் தரப்பிடம் இருந்து நட்டத்தை மீள அறவிட முடியும் என சட்ட மா அதிபர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பான கோப் குழு அறிக்கை குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் தொடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சட்ட மா அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோப் அறிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முறிகள் விநியோகம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்துவதற்கு பொலிஸ் முறைப்பாடு அத்தியாவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய வங்கியின் ஆளுநர் இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதால், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.
நட்டத்தை மீள அறவிடுவதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் அதனை நியாயமான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் சட்ட மா அதிபரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டினை கணக்காய்வாளர் நாயகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்காக நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற முடியும் எனவும் சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆரம்ப வாடிக்கையாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய வங்கிக்கு சட்ட அதிகாரம் உள்ளது எனவும் சட்ட மா அதிபரின் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.