தோனிக்கும் ரயில் நிலையத்துக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட் பேட்டைக் கையில் எடுக்கும் முன் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியவர் தோனி. ஒரு கட்டத்தில் பணியைத் துறந்து, கிரிக்கெட்டே கதி என மாறினார்.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக தற்போது தோனி அறியப்பட்டாலும், அவர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தோனியின் தந்தை ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியராக பணியாற்றினார். ஒரு சகோதரியும் சகோதரரும் உண்டு. காரக்பூரில் தோனி டிக்கெட் கலெக்டராக பணியாற்றியபோது, அங்குள்ள குடியிருப்பில் தோனியும் அவருடன் பணிபுரிபவர்களும் தங்கியிருந்துள்ளனர். அப்போது, இரவு நேரங்களில் வெள்ளைப் போர்வையை போர்த்திக் கொண்டு, அங்கு வசிப்பவர்களை தோனி பயமுறுத்துவாராம். காரக்பூரில் தோனி ஒரு ஜாலியான மனிதராகவே வலம் வந்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், அண்மையில் ஜார்க்கண்ட் அணிக்காக விஜய் ஹசாரே போட்டியில் தோனி பங்கேற்றார். கொல்கத்தாவில் நடந்த இந்த போட்டியில் பங்கேற்க ஜார்க்கண்ட் அணி, ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணித்தது. ரயிலில் பயணித்த ஜார்க்கண்ட் வீரர்களுடன் தோனியும் அதே வகுப்பில் பயணித்தார். அந்த ரயில், அவர் பணி செய்த, காரக்பூர் ரயில் நிலையத்தைக் கடந்துதான் கொல்கத்தா சென்றது. காரக்பூர் ரயில் நிலையத்தை கடந்த சென்றபோது நிச்சயம் தோனி மலரும் நினைவுகளில் மூழ்கி இருப்பார்.
கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறந்த காலத்திலும் தோனியை சாதாரண மனிதராக ராஞ்சியில் பார்க்க முடியும். ராஞ்சியில் இருக்கும் போது, தனது பழைய நண்பர்களைச் சந்திக்கும் பழக்கம் கொண்டவர். ராஞ்சி நகரில் நண்பர்களுடன் தோனி பைக்கில் பறப்பதையும் அடிக்கடி பார்க்கலாம். விஜய் ஹசாரே போட்டியில் விளையாடுவதற்காக தோனி கொல்கத்தா சென்றபோது அதுபோலவே இன்னொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2001 முதல் 2003ம் ஆண்டு வரை காரக்பூர் ரயில் நிலையத்தில் தோனி டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். அந்த சமயத்தில் காரக்பூர் ரயில் நிலையம் அருகே தாமஸ் என்பவரின் டீ கடையில் டீ அருந்துவது தோனியின் வழக்கம். தோனியும் தாமசும் நெருங்கிய நண்பர்கள். விஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி கொல்கத்தா வந்ததை கேள்விபட்டு, தோனியைக் காண வந்தார் தாமஸ்.
ஈடன் கார்டன் மைதானத்துக்கு வந்த அவரை தோனி அடையாளம் கண்டு கட்டியணைத்து வரவேற்றார். தாமசிடம் அவரது குடும்பத்தினர் பற்றி நலம் விசாரித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தும்,தோனி மறக்காமல் தன்னை அடையாளம் கண்டதில் தாமசுக்கு குஷி. பின்னர் அன்று இரவு தோனி, தாமசுக்கு டின்னர் விருந்தளித்து மகிழ்ந்தார். அதோடு, தாமஸ் உடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் தோனி வெளியிட்டுள்ளார். ‘பாத்தியா… எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும், எங்க ஆளு பழசை மறக்கலை’ என்கின்றனர் தோனி ரசிகர்கள். உண்மைதான்.