(க.கிஷாந்தன்)
நானுஓயா கிளாஸ்சோ தோட்ட தொழிலாளர்கள் 02.03.2017 அன்று 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தோட்ட நிர்வாகம் கொழுந்து இல்லாத காலத்திலும் 18 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் 18 கிலோவிற்கு குறைவாக பறித்தால் அரை நாள் சம்பளம் வழங்குவதாகவும் இதனால் தாம் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தோட்ட நிர்வாகம் தேயிலை செடிகளை முறையாக பாதுகாக்காமல் காடாக்கியுள்ளதாகவும் இத்தோட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
45 ஏக்கர் தேயிலை மலைகள் இருந்த இத்தோட்டத்தில் 13 ஏக்கர் தேயிலை மலையினை முறையாக பராமரிக்காமல் தோட்ட நிர்வாகம் கைவிட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 32 ஏக்கர் தேயிலை மலையில் மாத்திரமே தாம் தொழில் செய்வதாகவும் தோட்ட நிர்வாகம் வாரத்தில் குறைந்த நாட்களே தொழில் வழங்குவதாகவும் இவர்கள் கவலை அடைகின்றனர்.
காடாக உள்ள தேயிலை மலைகளை விவசாயம் செய்வதற்கு தோட்ட அதிகாரியிடம் பல முறை தாம் கேட்ட போதிலும் வெளியில் உள்ளவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கபோவதாக தோட்ட அதிகாரி தாங்களிடம் தெரிவித்ததாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
காடாக உள்ள இடங்களை தொழிலாளர்கள் துப்பரவு செய்ய முயற்சிகள் செய்த போது தோட்ட அதிகாரியால் தொழிலாளர்கள் மீது நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மலையக அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளிடம் முறைபாடுகள் செய்தபோதிலும் எவறும் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் ஆர்பாட்டகாரர்கள் தமக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.