”குஷ்பு,லட்சுமி நிகழ்ச்சிகளுக்கு எதிராக தடை விதிக்கவும்”




சன் டிவியில் குஷ்புவும், ஜி டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணனும் நடத்தி வரும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற வக்கீல் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். குடும்ப உறவுகளை தீர்த்து வைக்கும் படிப்புகளை இருவரும் படிக்கவில்லை என்று அவர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்
நடிகை குஷ்பு சன் டிவியில் நடத்தி வரும் ‘நிஜங்கள்’ என்ற நிகழ்ச்சியும், அதேபோல் ஜீ டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் ‘சொல்வதெல்லம் உண்மை’ என்ற நிகழ்ச்சியும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
நான்கு சுவருக்குள் தீர்க்க வேண்டிய குடும்ப பிரச்சனைகளை விளம்பரமாக்கி அதில் விளம்பரம் மூலம் காசு பார்க்கும் கேவலமான நிகழ்ச்சிகள் இவை என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் தன்னுடைய புகாரில் கூறியிருப்பதாவது:
‘நிஜங்கள்’, ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழச்சிகள் மனித உரிமைகள், மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறி வருகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படத்தை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.
நிகழ்ச்சி நடத்தும் குஷ்வு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் மோசமாக பேசுகிறார்கள்.குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்பவர்கள் அதற்கான படிப்பு படித்திருக்க வேண்டும். அவர்களிடம் அந்த படிப்பு இல்லை. குடும்பம், கலாச்சார உறவுகளை அவமானப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிகளை தடை செய்வதுடன் அதை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்