வேலையற்ற பட்டதாரிகளின் போராட்ட குழுவினர் மீது வழக்கு




இலங்கை   கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 16வது நாளாக தொடரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந் மற்றும்  ஒன்றிணைந்த பட்டதாரிகளின் பிரதான இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர்  உள்பட நான்கு பேருக்கு எதிராக போலீஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாக பகுதியில் போலீஸ் மற்றும் செயலக அதிகாரிகள் தங்கள்  கடமையை செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தியது, அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக இவர்கள் மீது போலீஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நீதிமன்ற அழைப்பாணையை ஏற்று இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலையில் ஆஜரான நான்கு பேரையும்  பிணையில்  செல்ல அனுமதியளித்த மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா   எதிர்வரும் 5-ம் தேதி  மீண்டும் ஆஜராக  வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு  இடைக்கால தடை உத்தரவு  பிறப்பிக்கக்கோரி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்  இரு வாரங்களுக்கு மேலாக நகரிலுள்ள காந்தி பூங்காவில் சதுக்கத்தில் தொடர்ச்சியான சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் போராட்டத்தின் ஒரு வடிவமாக கடந்த 28-ம்  தேதி  காந்தி பூங்காவிலிருந்து நகர வீதிகள் வழியாக பிரேத பெட்டியை சுமந்தவாறு  மாவட்ட செயலகம் வரை பேரணியொன்றை நடத்தி அரசாங்க அதிபரிடம் தங்கள் கோரிக்கை மனுவொன்றை கையளிக்க சென்றிருந்தனர்.
மாவட்ட செயலக வளாகத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகள் நுழைந்த வேளை  பாதுகாப்பு கடமையிலிருந்து  போலீஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில்  அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது.
இது தொடர்பாக மட்டக்களப்பு போலீஸார் நீதிமன்றத்தில் முன் வைத்த அறிக்கையின் பேரில்   குறித்த நால்வருக்கும் எதிராக நீதிமன்ற அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.