இலங்கை மற்றும் இந்தோனேஷியாவிற்கு இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன.
இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று முற்பகல் அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடடோவைச் சந்தித்தார்.
21 மரியாதை வேட்டுக்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்தோனேஷிய ஜனாதிபதி வரவேற்றார்.
வலய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஒற்றுமையாக செயற்படுவது தொடர்பில் இதன்போது இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தோனேஷிய பிரஜைகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வரிச்சலுகை மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் இந்தோனேஷிய ஜனபதிபதிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
சமுத்திர மற்றும் கடற்றொழில் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பிரதாயப்பூர்வ கைத்தொழில் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது.