உடல் பருமானான போலீஸ்காரரை கிண்டல் செய்து இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ஒருவர் போட்ட ட்வீட் எதிர்பாராத, சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில், இலவசமாக அவருக்கு உடல் பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமையன்று மருத்துவமனையைவிட்டு வெளியேறிய ஆய்வாளர் தவுலட்ராம் ஜோகாவாட்,
தன்னை பிரபலமாக்கிய எழுத்தாளர் ஷோபா டேக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ட்விட்டரில் ஜோகாவாட்டின் புகைப்படத்தை பதிவேற்றி, மும்பையில் உள்ள போலீஸார் உள்ளூர் தேர்தல்களுக்காக பலமான பாதுகாப்பிற்கு திட்டமிட்டுள்ளனர் என்று கிண்டல் செய்யும் விதமாக கருத்து ஒன்றை பதிந்திருந்தார் ஷோபா டே.
அந்த புகைப்படம் கொண்ட ட்வீட் வைரலாக பரவ தொடங்கியதையடுத்து, ஜோகாவாட்டுக்கு இலவசமாக சிகிச்சைகளை மேற்கொள்ள செய்ஃபீ மருத்துவமனை முன்வந்தது.
அறுவை சிகிச்சையை தொடர்ந்து ஜோகாவாட் நலமாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டிற்குள் சுமார் 80 கிலோ எடையை அவரால் இழக்க முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்குமுன் அவருடைய எடை 180 கிலோவாக இருந்தது.
மிகவும் ஆபத்தான நிலையில் உடல் பருமனாக இருக்கக்கூடியவர்களுக்கு இறுதியாக பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சைத்தான் பாரியட்ரிக் அறுவை சிகிச்சை.
இதை எடை குறைப்பு அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படும்.
உலகிலே மிக அதிக எடைக்கொண்டவராக கருதப்பட்ட எகிப்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு செய்ஃபீ மருத்துவமனை சிகிச்சை வழங்க ஆரம்பித்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தலைப்பு செய்திகளில் இந்த மருத்துவமனை இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஷோபா டேயின் ட்வீட்களால் சிகிச்சைக்காக மும்பை வரை வருவதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் ஜோகோவாட் தெரிவித்துள்ளார்.
உடலில் மருத்துவ ரீதியாக ஏற்பட்ட சிக்கல்களால் உடல் பருமனாக ஆனதே தவிர அதிகமாக சாப்பிட்டதால் அல்ல என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதனை பதிவிடவில்லை என்று தான் பதிந்த கருத்துக்கு பின்னர் விளக்கம் அளித்தார் ஷோபா டே.