நீதிமன்றுக்குள் ஆயுதங்களை வைத்தவர் சரண்




கல்கிஸை நீதவான் நீதிமன்ற அறைக்குள், பெஞ்சுக்கு கீழ், சுடுவதற்கு தயார் நிலையில் ஆயுதங்களை வைத்ததாக கூறப்படும், ரொசான் இந்திக டி சில்வா என்பவர், கல்கிஸை பொலிஸில் சரணடைந்துள்ளார். 

சுடுவதற்கு தயார் நிலையிலிருந்த  கைத்துப்பாக்கியும் நான்கு ரவைகளும், ரிவோல்வரும் ஆறு ரவைகளும், கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து பொலிஸாரினால் கடந்த முதலாம் திகதி மீட்கப்பட்டன. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, நீதிமன்ற வளாகத்தில், சந்தேகத்துக்கு இடமான முறையில் பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை சோதனைக்கு உட்படுத்திய போதே, இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சீன தயாரிப்பான இந்த ஆயுதங்கள், பிரயோகம் செய்வதற்கு தயாரான நிலையிலேயே இருந்தன என்றும் நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்தே, தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இவை எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்றும் கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கைதிகள் ஏற்றிச்சென்ற பஸ்ஸின் மீது, கடந்த 27ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களை அடுத்து, நீதிமன்றங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நீதவான் நீதிமன்றம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, ஆயுதங்கள் மீட்கப்பட்டமையால், நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் முழுமையாக  கைவிடப்பட்டன. நீதிமன்ற வளாகத்திலிருந்த சகலரும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்காக பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.