உயிரை காக்கும் உயரினை சேர்த்திடும்
உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்
உயிரினும் இந்த பெண்மை
இனிதடா……
உயிரினும் இந்த பெண்மை
இனிதடா……
இது மகா கவி பாரதியின் புரட்சி வரிகள்…
‘முக்காலத்தையும் காண்பவள் – சக்தியால் வெற்றிகொள்பவள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
1900 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கைத்தொழில் புரட்சி இடம்பெற்ற போது உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதுடன், பெண்களுக்கான உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
1908 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சம உரிமையின்மை ஆகியன அதிகரித்து வந்த நிலையில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் பெண்களின் குரல் ஒங்கி ஒலித்தது.
அதே வருடம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வேலை நேரத்தை குறைக்கக் கோரியும், அதிக சம்பளம் மற்றும் வாக்குரிமை வழங்குமாறு கோரியும் 15,000 பெண்கள் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
1909 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிசக் கட்சியின் பிரகடனத்தை அடுத்து, பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா முழுவதும் முதலாவது தேசிய பெண்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
1913 ஆம் ஆண்டு வரை பெப்ரவரி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
1910 ஆம் ஆண்டு ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் மகளிர் அலுவலகத் தலைவர் கிளாரா செட்கின், சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாடுவதற்கான யோசனையை டென்மார்க்கின் கொபென்ஹகெனில் முன்வைத்தார்.
பல்வேறு கலந்துரையாடல்களுக்குப் பின்னர் 1913 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டதுடன், அன்று முதல் சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியில் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
1975 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
வருடாந்தம் மார்ச் 8 ஆம் திகதி பெண்களை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களின் வெற்றிகளைக் கொண்டாடுவதற்கும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றிக் கொண்ட சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெண்கள் மீதான அடக்கு முறைகளும் துன்புறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.
எவ்வாறாயினும் எதிர்வரும் காலத்திலாவது பெண்ணியத்தை மதித்து, பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து, பாலின சமத்துவத்தை பேணுவதற்கு நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்….
மகளிர் தினம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை..
மானி்ட குலத்தின் தொடர் வலுவாதார வளர்சிக்கு பெண்களின் சக்தியே உந்துசக்தியாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கான திட்டத்தில் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் சிறார்களை வலுவூட்டல் செயற்றிட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பெண்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வகிப்பங்காளர்களாக காணப்படுவார்கள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, துரதிஷ்ட்டவசமாக எமது நாட்டில் பெண்கள் ஒடுக்கப்படுவதும், துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதும், கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் நிலைக் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் மற்றும் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுதல் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
பாலின சமத்துவத்தையும் சம நீதியையும் உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கை பெண்களின் சுய கௌரவத்தை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பெனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.