நிர்ணய விலையை விட அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 630 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்தது.
இதனிடையே, சந்தையில் அரிசியின் விலை குறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நிர்ணய விலைக்கு அமைவாகவே அரிசி விற்பனை செய்யப்படுவதாக மரதகஹாமுல்ல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.கே.ரஞ்சித் தெரிவித்தார்.
மேலும், நடமாடும் வர்த்தக நிலையங்களினூடாக நகரங்கள் மற்றும் சனநெரிசல் உள்ள பகுதிகளில் நிர்ணய விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டது.
நிர்ணய விலையை விட 3 ரூபா விலைக் குறைப்பில் சதொச நிலையங்களில் அரிசியைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிர்ணய விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதில்லை என பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.