வேலையி்ல்லாப் பட்டதாரிகள் மனித சங்கிலிப் போரட்டத்தில்




மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இணைந்துகொண்டனர். 

மட்டக்களப்பு நகரில் உள்ள வெள்ளைப்பாலத்தில் இருந்து காந்திபூங்கா வரையில் இந்த மனித சங்கிலி அமைக்கப்பட்டு பட்டதாரிகளினால் போராட்டம் நடாத்தப்பட்டது. 

இதன்போது பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், தங்களை பயங்கரவாதிகள் போல் பொலிஸார் பார்ப்பதாகவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 மார்ச் 31க்கு பின்னர் பட்டம் பெற்றவர்களுக்கு இதுவரையில் எந்த நியமனங்களையும் வழங்க மத்திய மற்றும் மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லையென பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

காலம்காலமாக பொய் வாக்குறுதிகளையே மத்திய, மாகாண அரசாங்கங்கள் வழங்கி வருவதாகவும், தமது நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் பட்டதாரிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தமது ஆதரவு தொடரும் என தெரிவித்துள்ளனர்.