உயர் ஸ்தானிகரின் அறிக்கைக்கு த.தே.கூ வரவேற்பு




தமிழ் தேசிய கூட்டமைப்பானது, 2015ம் ஆண்டின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தையும் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் வகையிலான, மனித உரிமை பேரவை உயர் ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கிறது. இவ்வறிக்கையானது அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் போன்ற கருமங்கள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, அரசாங்கம் செய்யத் தவறிய பல  முக்கியமான விடயங்கள் தொடர்பில் விமர்சனத்தையும் கொண்டுள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து கூட்டமைப்பு, இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அறிக்கை தொடர்பில் அக்கறை செலுத்துவதோடு, நம்பிக்கையை கட்டியெழுப்பும் விடயங்களான காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபையை மறுசீரமைத்தல் வர்த்தக மற்றும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் ஈடுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றன தொடர்பிலான  அரசாங்கத்தின்  நடவடிக்கைகள்  திருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறது. உண்மையில் இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடற்ற நிலைமையானது, எம்மக்கள் கொண்டுள்ள  நம்பிக்கையை நேர்த்தியாக குறைந்து வருகின்றது.