பாதுகாக்கப்பட்ட வில்பத்து வன பிரகடனத்தில் முஸ்லிம் மக்களின்
கருத்துக்களுக்கு செவிசாய்க்காது இனவாதிகளின் நோக்கத்தை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த அரசாங்கம் ஆரவாரமாகவும் வெளிப்படையாகவும் இனவாதிகளுக்கு
சார்பாக செயற்பட்டு அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற துணை போனது. ஆனால் இந்த அரசாங்கம் மிகவும் அமைதியாகவும் சூட்சுமமான முறையிலும் இனவாதிகளுக்கு உதவுகிறது.
ஜனாதிபதியின் இவாறானதொரு பிரகடனத்திற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் துணை போயுள்ளமை
கவலையளிப்பதாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் இது தொடர்பில்
தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் ரஷ்யாவுக்கான விஜயத்தின் மத்தியில் வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள நான்கு பிரதேசங்களை உள்ளடக்கி அவற்றை பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில்
கையொப்பமிட்டுள்ளார்.
வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம் தரப்பின் நியாயத்தையும் பிரச்சினைகளையும் காதுதாழ்த்தாது
ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்திருக்கின்றமை தெளிவாகின்றது. அண்மையில் சைட்டம் விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது அனைத்து தரப்புடனும் பேசி சமரசத்துக்கு வரலாம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏன் இவ்விடயத்தில் முஸ்லிம்களின் கருத்துக்களை ஆராயவில்லை என கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.
மறிச்சிக்கட்டி உள்ளிட்ட பகுதிகள் முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகள் என அண்மையில் அங்கு சென்று கள ஆய்வை மேற்கொண்டு வந்த சூழலியலாளர்கள் குறிப்பிட்டும் ஜனாதிபதி இவ்வாறு வர்த்தமானி அறிவித்தலில்
ஒப்பமிட்டிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது முஸ்லிம் மக்களின் உரிமைகளில் கைவைக்கும் செயற்பாடாகும். மக்களின் சொந்த காணிகளை திட்டமிட்டு
அபகரிக்கும் செயற்பாடாகும்.
இதேவேளை, இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பெரும் தவறினை இழைத்திருக்கின்றனர். வில்பத்து விடயத்தில் அவர்களால் வெறும் விளம்பரத்திற்காக ஹோட்டல்களில் கலந்துரையாடல்களை நடத்தவே முடிந்தது.
ஜனாதிபதி மிகவும் தந்திரமாக செயற்பட்டே இந்த விடயத்தை மேற்கொண்டுள்ளார். இவ்விடயத்தில் பிரதமர் தொடர்ந்தும் மெளனமாகவே இருக்கின்றார். நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுக்கும் அவர் எதுவும் தெரியாதது போல இருக்கின்றார். எங்களை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது. நாம் ஓர் அபாயகமான நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறோம்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பங்களில் ஒன்றுபட்டு தமது எதிர்ப்பை வெ ளிப்படுத்த வேண்டும். ஜனாதிபதியை கூட்டாகச் சென்று சந்தித்து இந்த அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோர வேண்டும். ஆனால் அவ்வாறு எதனையும் இவர்கள் செய்யவில்லை.
எனினும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது விடயத்தில் போராடவும் மக்கள் சார்பாக நின்று குரல் கொடுக்கவும் முழு உரிமையையும் கொண்டுள்ளது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டார்