இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேஷியா சென்றடைந்தார்.
இந்து சமுத்திர வலய நாடுகளின் அரச தலைவர்களின் வலுவாதார மற்றும் சமநிலை அபிவிருத்தி என்பனவற்றை நோக்காக கொண்டு 20 ஆவது தடவையாகவும் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று (05) இந்த மாநாடு ஆரமபமானதுடன், நாளை (07) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேஷிய ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
மேலும், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கையும் சில உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளது.
அது தொடர்பான அடிப்படை இணக்கப்பாடு, கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான சூபீட்சமான பிராந்தியமாக மாற்றியமைத்தல், கூட்டு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை மாநாடு நடைபெறுகிறது.
இந்து சமுத்திர வலயத்தில் உள்ள நாடுகள் அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் அரச தலைவர்களின் மாநாடு நாளை (07) இந்தோனேஷியாவில் இடம்பெறவுள்ளது.
சமுத்திரக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வர்த்தகம், முதலீடுகளுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல், கடற்றொழில் நடவடிக்கை குறித்த முகாமைத்துவம், இடர்களைக் கட்டுப்படுத்துதல், கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாசார விடயங்களை பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.