தரம்சாலா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், எட்டு விக்கெட்டுகள்வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
புனே நகரில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
பெங்களூருவில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிவடைய, நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதியன்று தரம்சாலாவில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை எடுத்தது. இந்திய புதுமுக சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர், தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்தியா 332 ரன்களை எடுத்தது. கே. எல். ராகுல், புஜாரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இந்திய வீரர்கள் அரை சதமடித்தனர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இந்திய பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா இழந்தது.
106 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற எளிய இலக்குடன், தனது 2-ஆவது இன்னிங்ஸை துவக்கிய இந்தியா ஆரம்பத்தில் இருந்தே நன்கு அடித்தாடியது.
முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், கே. எல். ராகுல் மற்றும் அணித்தலைவர் ரஹானே ஆகியோர் ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை இந்தியா அடைய உதவினர்.
இதனால் எட்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா தரம்சாலா டெஸ்ட் போட்டியில் வென்றது. முன்னதாக பெங்களூரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வென்றுள்ளதால், தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.