இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், உள்ளுர் மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகின்றது.
ஒரு வார காலத்தில் டெங்கு நோயாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள 7 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக நேற்று புதன்கிழமை இரவு குறித்த இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா. மூதூர் , உப்புவெளி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் டெங்கு என சந்தேகிக்கப்படும் 1300 பேர் வரை சுகாதார துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேசம்
இந்த எண்ணிக்கையில் 500க்கும் அதிகமானோர் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன், கிண்ணியா மற்றும் திருகோணமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக அருகாமையிலுள்ள அரசு பள்ளியில் நோயாளர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். எம். நசீர் தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலிருந்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குறித்த வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வருகை புரிந்த சுகாதார குழு
கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோ , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் , மத்திய , மாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இன்று வியாழக்கிழமை கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பு காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகின்றது.
இந்த ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் 16479 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கூடுதலானோர் கொழும்பு மாவட்டத்திலே இனம் காணப்பட்டுள்ளனர். அதாவது 4136 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை மட்டக்களப்பில் 510 பேர் , திருகோணமலையில் 810 பேர் மற்றும் அம்பாரையில் 87 பேர் என மொத்தம் 1421 டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கை கொசுவினால் பரவும் மலேரியா மற்றும் யானைக் கால் நோய் ஆகிய நோய்கள் பரவும் நாடுகள் பட்டியலிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்தால் கடந்த ஆண்டு முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தது.
அந்நோய் பரவுவதிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலையை தற்போது எதிர்கொண்டுள்ளது.